Advocate Sivaprabahara Varman

Advocate Sivaprabahara Varman Law is Supreme மடத்துக்குளம் இந்துக்கள்

01/09/2024


பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 எப்ஐஆர்களையும் ரத்து செய்ய கோரி யூடியூபர் சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, அதேபோன்று சங்கருக்கு எதிராக இரண்டாவதாக போடப்பட்ட குண்டாசை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது சங்கருடைய தாயார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய இரண்டின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன், " யூடியூபர் சங்கரை பொறுத்தவரை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிபதிகளுக்கு எதிராகவும், அதேபோன்று ஆண் போலீஸ் மற்றும் பெண் போலீஸ் ஆகியோர்களுக்கு எதிராக அவதூறாகவும், ஆபாசமாகவும் வீடியோவில் பேசியுள்ளார்" என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பிறப்பித்த உத்தரவில், "யூடியூபர் சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 16 எப்ஐஆர்களையும் கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. இருப்பினும் அனைத்தையும் ஏன் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கூடாது. இதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எப்ஐஆர்களின் விவரங்களையும் ஒரு சிறிய அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

01/09/2024


இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பிளவுபட்டது. இரட்டை இலை சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் முயன்றதாகவும் சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த 2017ல் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான புகாரை விசாரித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர்.

மேலும் மல்லிகார்ஜூனா, நாது சிங், புல்கிட் குந்த்ரா, பி குமார், லலித் குமார், ஜெய் விக்ரம் ஹரன், நரேந்திர ஜெயின் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விஷால் கோக்னே, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சுகேஷ் ஜாமீன் பெற்றாலும், பிற வழக்குகள் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.

01/09/2024


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் சின்னப்பையன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டபோது, சின்னப்பையனுக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரக்கட்டைகளை அப்போதைய வேலூர் மாவட்ட கலால் டி.எஸ்.பி தங்கவேலு என்பவர் கடத்திச்சென்றதும், செம்மரக்கட்டைகளை திரும்ப எடுக்கவந்த கும்பலிடம் `போலீஸார் பறிமுதல் செய்துவிட்டார்கள்' எனச்சொல்லியும் சின்னப்பையன் மீது சந்தேகப்பட்டு அவரை அடித்துக்கொன்றதாகவும் தெரியவந்தது.

இந்த கொலைக் குற்றம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில், டி.எஸ்.பி தங்கவேலு மூலமாக கடத்திச்செல்லப்பட்ட 7 டன் செம்மரக்கட்டைகளை விற்க உதவியதாக சத்துவாச்சாரி அருகேயுள்ள அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், இவரது மனைவி ஜோதிலட்சுமி உள்பட மேலும் 6 பேரும் கைதுசெய்யப்பட்டார்கள். இதையடுத்து, டி.எஸ்.பி தங்கவேலுவும் கைதுசெய்யப்பட்டார். மூன்றாவது குற்றவாளியாகவும் டி.எஸ்.பி தங்கவேலு சேர்க்கப்பட்டதால் பணியில் இருந்து `சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதேபோல, பல்வேறு புகார்கள் தங்கவேலு மீது இருக்கின்றன. இந்த நிலையில், டி.எஸ்.பி தங்கவேலுவை `காவல் பணிக்குத் தகுதியற்றவர்' எனக் கருதி, பணியில் இருந்து நிரந்தமாக விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி சங்கர் ஜிவால்.

01/09/2024


இந்தியாவில் 2022ம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையில் 6% நிலையான வளர்ச்சி விகிதம் மற்றும் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக அதிகரித்ததை குறிப்பிட்டு, புலிகள் பாதுகாப்பில் சிறப்பான முயற்சிகளுக்காக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு வழக்கறிஞர் அனுபம் திரிபாதி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.வி.சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, ​​கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, மத்திய அரசாங்கம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) சார்பில், புலிகள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை எடுத்துக்காட்டும் புள்ளிவிவரங்களை வழங்கினார். மேலும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி, புலிகளின் எண்ணிக்கையில் நேர்மறையான வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 2014 ல் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022 ல் 3,682 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிக்கையில் திருப்தி அடைந்த நீதிமன்றம், பொது நல வழக்கு நடவடிக்கைகளை முடித்துவைக்க முடிவு செய்தது. மேலும், 'மத்திய அரசின் அறிக்கையைப் பார்த்தோம். நல்ல வேலை செய்யப்பட்டுள்ளது' என்று உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது

மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய இந்தியா, ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள் போன்ற பகுதிகளில் குறிப்பாக மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் புலிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற சில பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை சரிவை சந்தித்தன.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 53 புலிகள் காப்பகங்களில் குவிந்துள்ளது. இது 75,796 சதுர கிலோமீட்டர் அல்லது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 2.3% ஆகும். அதிக புலிகள் எண்ணிக்கை கொண்ட காப்பகங்களில் உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்கா அடங்கும், இதில் 260 புலிகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பந்திப்பூர் (150 புலிகள்) மற்றும் நாகர்ஹோல் (141 புலிகள்) உள்ளன.

சராசரியாக 2022ம் ஆண்டில் நாட்டில் 3,682 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புலிகளின் எண்ணிக்கை 3,167 முதல் 3,925 வரை இருக்கலாம். இந்த மதிப்பீடுகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட தனித்துவமான புலிகளின் எண்ணிக்கை மற்றும் புகைப்படம் எடுக்கப்படாத புலிகளின் எக்ஸ்ட்ராபோலேஷன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

உச்ச நீதிமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், புலிகள் இறப்பு பற்றிய தரவுகளையும் மத்திய அரசாங்கம் சமர்ப்பித்தது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 47 புலிகள் இறந்துள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தில் 17 புலிகள், மகாராஷ்டிராவில் 11 புலிகள் மற்றும் கர்நாடகாவில் 6 புலிகள் இறந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

2023ம் ஆண்டில் 181 புலிகள் இறந்தன. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 45 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (43 புலிகள்) மற்றும் உத்தரகாண்ட் (21 புலிகள்) உயிரிழந்துள்ளன. 2023ல் உயிரிழந்த 181 புலிகளில், 115 புலிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 44 புலிகள் இயற்கையான காரணங்களால் இறந்ததாகவும், 9 புலிகள் வேட்டையாடப்பட்டதாகவும், 7 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களால் வேட்டையாடப்பட்டதாகவும், 6 புலிகள் வலிப்புத் தாக்கத்தால் இறந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20/08/2024


சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதியன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்பட சிலருக்கு திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2013-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்களில் சிலரை விடுவித்தும், சிலர் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

20/08/2024


வீடு விற்பனை பத்திரப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டி மதிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றுள் நிலத்திற்கான மதிப்பு பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். "சந்தை மதிப்பின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் பதிவுக்கட்டணத்தினை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு வழிகாட்டி மதிப்பில் தேவையான மாற்றங்களை பரிசீலனை செய்ய குழுவை நியமனம் செய்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதிவுக்கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பதிவுக்கட்டண குறைப்பு நடைமுறைக்கு வந்தது.

இதனை எதிர்த்து கட்டுமான சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் கருத்துகளை கேட்டு அதனடிப்படையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழிகாட்டி மதிப்பு கடந்த மாதம் திருத்தி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கான மதிப்பை தனியாக கணக்கிடுவது அவசியம். குறிப்பாக, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வெளியிடும் மதிப்புகள் அடிப்படையில், கட்டடங்கள் மதிப்பிடப்படும். அந்த வகையில், 2024 - 25ம் ஆண்டுக்கான கட்டடங்களுக்கான மதிப்பு விபரங்களை, பொதுப்பணி துறை தற்போது வெளியிட்டுள்ளது.

ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய மதிப்புகள் அடிப்படையில் பத்திரங்கள் இருக்க வேண்டும் எனவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய வழிகாட்டி நடைமுறைகள்:

பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய்; இரண்டாம் தளம், 10,695 ரூபாய்; 3வது தளம், 10,870 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரைதளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும், 10.7 சதுர அடிக்கு, 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோன்று கட்டுமான பொருட்கள் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டட மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த மதிப்பு, 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

20/08/2024


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 9வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 25 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாகப் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். இந்த குழுவில் சிறப்பு மருத்துவர்கள் குழு, சிறப்புத் தடயவியல் குழுவினரும் அடங்கியுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் மாநில போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் (20.08.2024) விசாரணைக்கு வர உள்ளது.

20/08/2024

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்.. ரூ.1 லட்சத்தை கையை நீட்டி வாங்கிய 4 தனிப்படை போலீசார் சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சப்-லைன் அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநந்தம் உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில் வீரபாண்டி, ஷாகுல் ஹமீது, மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

வளநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் கடந்த மே 9-ஆம் தேதி தனிப்படையினர் சிறப்பு சோதனை நடத்தியபோது, ​​சட்டவிரோதமாக ஏர்கன் மூலம் பறவைகளை வேட்டையாடிய புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சதாசிவம், ராமசாமி, நாகராஜ், ராமசாமி, நாகராஜ் ஆகியோரை பிடித்தனர்.

மேலும், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அன்றைய தினமே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணில் (9487464651) உறவினர் சதாசிவம் விஜயகுமார் தனிப்படையினர் லஞ்சம் பெற்றதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது 3வது பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் உள்ளிட்ட நான்கு காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

20/08/2024


சென்னை: ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கோவை சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரான திமுக நிர்வாகி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.11 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறி எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மான நஷ்டஈடு கோரி திமுகவின் சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரான ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்க எஸ்.பி.வேலுமணிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜூம், எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ''ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி தவறானது என தெரிவித்துள்ள மனுதாரர், அந்த நாளிதழ்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் பேசிய எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மட்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரத்தை மான நஷ்ட ஈடாக கோர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அதேசமயம், இந்த சம்பவம் குறித்து மட்டும் எதிர்காலத்தில் மனுதாரர் குறித்து வேலுமணி எதுவும் பேசக்கூடாது என நிரந்தர தடை விதிக்கிறேன். ஆனால், மனுதாரரின் மற்ற நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவும், பேசவும் பொதுவாழ்வில் உள்ள எதிர்மனுதாரரான வேலுமணிக்கு உரிமை உள்ளது. எனவே, நிரந்தர தடை தவிர, மான நஷ்ட ஈடு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை ஏற்க முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

18/08/2024


தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்
சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள்
தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில்
கடன் பெறப்பட்டு,ரூ.3.30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இது அனைத்துமே மனுதாரரின் உதவியுடன் நடைபெற்றதாலேயே குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள்
எனவும் காவல்துறை விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம் எனக்கூறி, செல்வராஜ்
மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டுமெனவும், இது போல குண்டர் தடுப்புச் சட்டத்தை சாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும், அது
சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளனர்.

    Madathukulam_Advocate
03/06/2024

Madathukulam_Advocate

Address

Raja Street, Palani Main Road
Udumalpet
642113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Sivaprabahara Varman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share