Budding Lawyers

Budding Lawyers States about the Laws which were not known or noticed by many...

❓ கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராமல் ஏற்றதை ஆற்றக...
11/08/2026

❓ கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராமல் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்குமா; ஒப்பந்த காலக்கெடு முடிந்த பின்னர் கடன் பெற்று, ஆறு ஆண்டுகள் கழித்து மீதி தொகையை செலுத்தியது வாதியின் தயார்நிலையை நிரூபிக்குமா?

இவ்வழக்கில், முதல் வாதி 29.08.2003 அன்று இரு ஆவணங்கள் மூலம் வாடகை ஒப்பந்தம் செய்து, ரூ.7,00,000 முன்பணமும் மாதம் ரூ.9,000 வாடகையும் என்ற நிபந்தனையில் வழக்குச் சொத்தில் இருந்து வந்தார். பின்னர் சொத்தை விற்க முன்வந்ததாகக் கூறி, 10.04.2007 தேதியிட்ட கிரைய ஒப்பந்தம் (Ex.A3) ஏற்பட்டதாகவும், அன்றே ரூ.22,00,000 முன்பணமாக பெறப்பட்டதாகவும் வாதிகள் தெரிவித்தனர். ஆனால் Ex.A3-க்கு நகல் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பின், 30.08.2007 தேதியிட்ட கிரைய ஒப்பந்தம் (Ex.A4) ரூ.16,48,000 கிரையத் தொகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, ரூ.3,20,000 முன்பணமாக பெறப்பட்டது; மீதி ரூ.13,28,000 இரண்டு மாதங்களுக்குள், அதாவது 30.10.2007-க்குள் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை இருந்தது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி O.S.No.15 of 2008 தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலுரையில், Ex.A3 புனையப்பட்ட ஆவணம் என மறுக்கப்பட்டது. வாதி வாடகைதாரர் மட்டுமே என்றும், கிரைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுபவ உரிமை ஒப்படைக்கப்படவில்லை என்றும், வாடகை செலுத்தாத காரணத்தால் R.C.O.P.No.22 of 2008 தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. காலக்கெடுவுக்குள் வாதி மீதி தொகையை செலுத்தத் தவறியதால், Ex.A5 அறிவிப்பு மூலம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், எனவே ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது என்றும் வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம், Ex.A5 ஒருதலைப்பட்சமான ரத்து என்றும் அது வாதியை கட்டுப்படுத்தாது என்றும் கூறி 31.07.2015 அன்று வழக்கை ஏற்று தீர்ப்பாணை வழங்கியது. அதனை எதிர்த்தே இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

நீதியர் ஈராயம் (Division Bench) முதலில் வழக்கின் நிலைத்தன்மையை ஆய்வு செய்தது. உச்சநீதிமன்றத்தின் Sangita Sinha v. Bhawana Bhardwaj (2025 INSC 450) தீர்ப்பில், I.S.Sikandar v. K.Subramani (2013) 15 SCC 27, A.Kanthamani v. Nasreen Ahmed (2017) 4 SCC 654 மற்றும் R.Kandasamy v. T.R.K.Saraswathy ஆகிய தீர்ப்புகளுக்கு இடையிலான நிலைப்பாடு ஆராயப்பட்டு, ஒப்பந்தம் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராத நிலையில் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. கீழ்நீதிமன்ற ஆவணங்களையும் வழக்குரையையும் பரிசீலித்த நீதிமன்றம், Ex.A5 அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை எந்த இடத்திலும் கோரப்படவில்லை எனக் கண்டறிந்து, விளம்புகை பரிகாரம் கோராதது வாதியின் வழக்கை பாதிக்கும் என முடிவு செய்தது.

ஒருதலைப்பட்ச ரத்து குறித்த விசாரணை நீதிமன்றத்தின் கண்டறிதலும் ஏற்கப்படவில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 39-இன்படி, மற்றொரு தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராத நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை பிரதிவாதிக்கு இருந்தது என்றும், ரத்து செய்வதற்கு முன் அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை என்றும் நீதிமன்றம் கூறி, அந்தக் கண்டறிதலை நீக்கியது.

தயார்நிலை மற்றும் விருப்பம் குறித்த ஆய்வில், வாதியின் குறுக்கு விசாரணை ஒப்புதல்களே அவருக்கு எதிராக அமைந்தன. ஒப்பந்த காலக்கெடு 30.10.2007 அன்று முடிந்த நிலையில், வங்கிக் கடன் 12.11.2007 அன்றுதான் அனுமதிக்கப்பட்டது என வங்கி மேலாளர் (P.W.3) தெரிவித்தார். காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு பிரதிவாதிக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை; கடன் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கிரையத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அறிவிப்பு அனுப்பப்படவில்லை; Ex.A6 பதில் அறிவிப்பிலும் தயார்நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. தயார்நிலை என்பது தரப்பினரின் முயற்சியையும் பொருளாதார சூழ்நிலையையும் குறிக்கிறது; விருப்பம் என்பது கிரையத்தை நிறைவேற்றும் நோக்கத்தைக் குறிக்கிறது என நீதிமன்றம் விளக்கியது. ஒப்பந்தம் 18.12.2007 அன்று ரத்து செய்யப்பட்ட நிலையில், மீதி ரூ.13,28,000 ஆறு ஆண்டுகள் கழித்து 2013-ல் மட்டுமே நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது; எனவே கிரையத்தை நிறைவேற்றும் பொருளாதார சூழ்நிலை வாதிக்கு இருந்ததில்லை என முடிவு செய்யப்பட்டது.

பகுதி நிறைவேற்றத்தின் அடிப்படையில் அனுபவ உரிமை ஒப்படைக்கப்பட்டது என்ற வாதமும் ஏற்கப்படவில்லை. Ex.A4 பதிவு செய்யப்படாத ஆவணம் என்பதும், சொத்து மாற்றுச் சட்டம் சட்டப்பிரிவு 53(A)-இன் பயனை பெற ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், அனுபவ உரிமை ஒப்படைப்பு குறித்து Ex.A4-ல் எந்தக் குறிப்பும் இல்லை; வாடகைக்கு விடுபவர் மற்றும் வாடகைதாரர் என்ற உறவே தொடர்வதாக வாதியே குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். வழக்கு Ex.A4 அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தும், நீதிமன்றக் கட்டணம் Ex.A3-ல் உள்ள தொகையின் அடிப்படையில் செலுத்தப்பட்டது; வாடகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை உள்ளிட்ட பிற வழக்குகளில் வாதி முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்திருந்தார்.

ஏற்றதை ஆற்றக் கோரும் பரிகாரம் நீதிமன்றத்தின் முடிவிற்கு உட்பட்டது என்றும், கிரையத்தை நிறைவேற்றி தனது தயார்நிலையை நிரூபிக்கும் பொறுப்பு வாங்குபவரையே சாரும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பின், விளம்புகை பரிகாரம் இல்லாத நிலையில் Ex.A4 சட்டத்தின் பார்வையில் "non est" ஆகிவிடுகிறது எனத் தெரிவித்து, குறித்தவகை பரிகார சட்டம் சட்டப்பிரிவு 16(c)-இன் தேவைகளையும் வாதி பூர்த்தி செய்யவில்லை என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டு, 31.07.2015 தேதியிட்ட தீர்ப்பும் தீர்ப்பாணையும் ரத்து செய்யப்பட்டு, O.S.No.15 of 2008 தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் மூலம், **"வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த ரத்து சட்டப்படி செல்லாது என்ற விளம்புகை பரிகாரம் கோராமல் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கு நிலைக்காது; காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்தாமலும், தயார்நிலையை காட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பவர் இப்பரிகாரத்தை பெற உரிமை இல்லை"** என்ற சட்டக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

---

**Court:** Madurai Bench of Madras High Court
**Case No.:** A.S.(MD)No.234 of 2015 and M.P.(MD)No.1 of 2015
**Parties:** Gana.Kannappan v. G.Mohanlal Patel & Another
**Coram:** Justice RMT.Teekaa Raman and Justice N.Senthil Kumar
**Reserved on:** 30.01.2025
**Date of Judgment:** 25.04.2025
**Citation:** 2025 (3) CTC 306

❓ காலவரையத்தால் பாதிக்கப்பட்ட கடனைத் திருப்பித் தருவதாக வழங்கப்பட்ட காசோலை, இந்திய ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 25(3)-இ...
10/08/2026

❓ காலவரையத்தால் பாதிக்கப்பட்ட கடனைத் திருப்பித் தருவதாக வழங்கப்பட்ட காசோலை, இந்திய ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 25(3)-இன் கீழ் நிறைவேற்றத்தக்க வாக்குறுதியாகுமா; காசோலை வங்கியில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், மாற்றுமுறை ஆவணச் சட்டம் சட்டப்பிரிவு 64-ஐ காரணம் காட்டி காசோலை எழுதிக் கொடுத்தவர் தம் பொறுப்பிலிருந்து விலக முடியுமா?

இவ்வழக்கில், வாதி S.S. மணியன் அவர்கள், பிரதிவாதி K.V. முருகேசன் அவர்களிடமிருந்து ரூ.13,23,333 வசூலிக்கக் கோரி நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 14.08.2011 அன்று ரூ.15,00,000 கிரையத் தொகைக்கு அசையாச் சொத்து குறித்து கிரைய ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கப்பட்டு, அன்றே ரூ.8,00,000 முன்பணமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.7,00,000-ஐ மூன்று ஆண்டுகளுக்குள் செலுத்தி கிரையத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தரப்புகளுக்கிடையேயான உடன்பாடு. ஆனால், மூல உரிமை ஆவணங்கள் வேறொரு தரப்பினரிடம் இருந்ததால், அவற்றை பிரதிவாதி மீட்டுப் பெற இயலவில்லை; அதனால் காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் வாய்மொழியாக நீட்டிக்கப்பட்டது. இறுதியில் நடுவர்கள் முன்னிலையில் நடந்த சமரசத்தில், பெற்ற முன்பணத்தை ரூ.2,00,000 வட்டியுடன் திருப்பித் தர பிரதிவாதி ஒப்புக்கொண்டு, HDFC Bank, Rasipuram branch கணக்கிலிருந்து 08.05.2016 தேதியிட்ட ரூ.10,00,000-க்கான காசோலையை (Ex.A.1) எழுதிக் கொடுத்தார். இரண்டு மாதங்களுக்குள் தொகையைச் செலுத்தி காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டதால், வாதி அதை வசூலுக்குச் சமர்ப்பிக்கவில்லை; பின்னர் முன்பணமும் வட்டியும் திருப்பித் தரப்படாததால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலுரையில், 14.08.2011 அன்று எந்த கிரைய ஒப்பந்தமும் எழுதிக் கொடுக்கப்படவில்லை என்றும், Tiruchengode-இல் உள்ள Mahalakshmi Finance நிறுவனத்தில் மட்டுமே கடன் பெறப்பட்டு, அதற்காகக் காசோலையும் கையொப்பமிடப்பட்ட வெற்றுத் தாள்களும் ஒப்படைக்கப்பட்டன என்றும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக வாதி இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் வாதி P.W.1-ஆகவும், திரு. கணபதி அவர்கள் P.W.2-ஆகவும் சாட்சியமளித்தனர்; Ex.A.1 காசோலை ஆவணமாகக் குறிக்கப்பட்டது. பிரதிவாதி தரப்பில் வாய்மொழி அல்லது ஆவண ஆதாரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. முன்பணத்தைத் திருப்பித் தரும் நோக்கில் காசோலை வழங்கப்பட்டது நிரூபிக்கப்பட்டதாகவும், மாற்றுமுறை ஆவணச் சட்டம் சட்டப்பிரிவு 139-இன் கீழ் எழும் முன்அனுமானம் மறுக்கப்படவில்லை என்றும் கூறி, விசாரணை நீதிமன்றம் 05.04.2021 அன்று வழக்கை ஏற்று தீர்ப்பாணை வழங்கியது.

மேல்முறையீட்டில் பிரதிவாதி தரப்பில், மூல கிரைய ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், வழக்கு காலவரையத்தால் பாதிக்கப்படும் என்றும், காசோலை ஒப்பந்தத்தின் மீதான ஒப்புதல் பதிவாகக் கருதப்படாததால் அது காலவரையத்தை நீட்டிக்காது என்றும், நிரூபிக்கும் சுமையை மேல்முறையீட்டாளர் மீது மாற்றியது தவறு என்றும் வாதிடப்பட்டது. காசோலை வசூலுக்குச் சமர்ப்பிக்கப்படாததால் சட்டப்பிரிவு 64-இன்படி வழக்கே நிலைக்காது என்றும் வாதிடப்பட்டு, N.Jayamurugan v. M/s. Saravana Global Holdings Limited, 2024 (6) CTC 455 தீர்ப்பு நம்பியிருக்கப்பட்டது. வாதி தரப்பில், காசோலை ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 25(3)-இன் வரம்பிற்குள் வருவதால் சமர்ப்பிப்பு கட்டாயமல்ல என்றும், சமர்ப்பிக்கப்படாததால் இழப்பு ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை என்றும், இவ்வாதம் விசாரணை நீதிமன்றத்தில் எழுப்பப்படாமல் மேல்முறையீட்டு நிலையில் முதன்முறையாக எழுப்பப்படுவதால் ஏற்க இயலாது என்றும் வாதிடப்பட்டு, C.M. Sivaram v. V.S. Jayaram Mudaliar, AIR 1966 Mad 297, Benares Bank Limited v. Horumusji Pestonji, AIR 1930 All 648, K. Rajagopal v. R. Suman (C.R.P.No.1054 of 2021) மற்றும் Manik Ratan Guin v. Prokash Chandra Chattopadhyay, AIR 1955 Cal 338 ஆகிய தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டன.

நீதிமன்றம் முதலில் ஆவண நிலையை ஆய்வு செய்தது. ஒப்பந்தமே இல்லை என்ற பொதுவான மறுப்பைத் தவிர, வழக்குரையில் கூறப்பட்ட குறிப்பிட்ட கூற்றுகளுக்குப் பதிலுரையில் தனிப்பட்ட மறுப்பு இடம்பெறவில்லை; P.W.2-இன் முதன்மை விசாரணை குறுக்கு விசாரணையில் மறுக்கப்படாததால் அது ஒப்புக்கொள்ளப்பட்டதாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியது. காசோலை வழங்கப்பட்டது மறுக்கப்படாத நிலையில், அது Mahalakshmi Finance நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது என்ற கூற்றுக்கு ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை; தரப்புகளுக்கிடையே பகைமை இல்லை என்பது D.W.1 சாட்சியத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், பொய் வழக்கு தொடர வாதிக்குக் காரணம் இருந்திருக்க இயலாது என்று நீதிமன்றம் கண்டறிந்தது. காசோலை வழங்கப்பட்டபோதே மூல ஒப்பந்தம் பிரதிவாதியிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது என்ற P.W.1-இன் சாட்சியத்தை ஏற்று, மூல ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படாதது வழக்கைப் பாதிக்காது என்று கூறியது.

வாக்குறுதி குறித்த கேள்வியில், K.K. Rm. Muthayee Achi v. A.K. Rm. S. Rm. Subbiah Chettiar, AIR 1951 Mad 903 தீர்ப்பை நீதிமன்றம் நம்பியது; அதில், Ganpathi Moodelly v. Munisami Moodely (33 Mad 159) தீர்ப்பைத் தொடர்ந்து, ஆவணத்தில் அந்தக் கடன் குறிப்பிடப்படாவிட்டாலும், உண்மையான பிரதிபலன் காலவரையத்தால் பாதிக்கப்பட்ட கடன் என்பது காட்டப்பட்டால் சட்டப்பிரிவு 25-இன் கீழ் வாக்குறுதி நிறைவேற்றத்தக்கது எனக் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவுகள் 2(b), 2(d) மற்றும் 9-ஐ இணைத்துப் படித்த நீதிமன்றம், வாக்குறுதி வெளிப்படையாகவோ உள்ளுறையாகவோ இருக்கலாம் என்று கூறியது. மேல்முறையீட்டாளர் தரப்பே நம்பியிருந்த N.Jayamurugan வழக்கின் 35 முதல் 38 வரையிலான பத்திகள், சட்டப்பிரிவு 25(3)-இல் "express" என்ற சொல் இடம்பெறாததால் அதன் வரம்பை வெளிப்படையான வாக்குறுதிக்கு மட்டும் சுருக்க இயலாது எனக் கூறுவதைச் சுட்டிக்காட்டி, காசோலையை ஒப்படைத்ததே கடனைத் திருப்பித் தரும் உள்ளுறை வாக்குறுதி என்று முடிவு செய்தது. K. Rajagopal v. R. Suman தீர்ப்பையும் மேற்கோள் காட்டி, காசோலை வழங்கப்பட்டவுடனேயே அதை வைத்திருப்பவருக்கு வழக்குக் காரணம் எழுகிறது என்றும், அது வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டதா என்பது வழக்கின் நிலைப்பாட்டைப் பாதிக்காது என்றும் கூறியது.

சட்டப்பிரிவு 64 குறித்த வாதத்தில், அதில் உள்ள "other parties" என்ற சொற்றொடர் காசோலை எழுதிக் கொடுத்தவரை உள்ளடக்காது என்ற பொதுச் சட்டக் கொள்கையை நீதிமன்றம் விளக்கியது. Ramchurn Mullick v. Lutchmeechund Radakissen, (1811-72) 4 IR 198, Robinson v. Hawksford, (1846) 115 ER 1195, Kanhayalal v. Ramkumar, AIR 1956 Raj 129, Harish Chander v. Ganga Singh, AIR 1974 P&H 156, Sumitra Baluja v. Bharat Chemical Industries, (1983) 53 Comp Cas 561 மற்றும் Abdul Majid v. Ganesh Das Kalooram Ltd., AIR 1954 Ori 124 ஆகிய தீர்ப்புகளை ஆய்வு செய்து, சட்டப்பிரிவுகள் 37, 72, 76(d) மற்றும் 84-ஐ இணைத்துப் படித்தபோது, காசோலை எழுதிக் கொடுத்தவரே முதன்மைக் கடனாளியாகத் தொடர்கிறார் என்று கூறியது. சமர்ப்பிப்பு நடைபெறாததால் உண்மையான இழப்பு ஏற்பட்டதைப் பதிலுரையில் கூறி நிரூபிப்பது சட்டப்பிரிவு 76(d)-இன் விலக்கைப் பெற இன்றியமையாதது; Subanamma Ninan v. George Veeran, 2020 SCC OnLine Ker 4151 தீர்ப்பின்படி நியாயமான காலம் காசோலையின் தேதியிலிருந்தே கணக்கிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. G.M. Sivaram v. Jayaram Mudaliar, AIR 1966 Mad 297 நீதியர் ஈராயத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பொறுப்பையே மறுக்கும் தரப்பு சமர்ப்பிப்பு விதியின் பின்னால் ஒதுங்க இயலாது என்றும், அத்தகையவர் சமர்ப்பிப்பு உரிமையைக் கைவிட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியது.

சமர்ப்பிக்கப்படாததால் ஏற்பட்ட இழப்பு குறித்து இவ்வழக்கின் பதிலுரையில் எந்தக் கூற்றும் இடம்பெறாத நிலையில், மேல்முறையீட்டு நிலையில் சட்டப்பிரிவு 64-ஐ காரணம் காட்டிப் பொறுப்பிலிருந்து விலக இயலாது என்று கூறி, மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பாணையை உறுதிப்படுத்தியது; செலவுகள் குறித்து உத்தரவு இல்லை.

இந்த தீர்ப்பின் மூலம், **"காலவரையத்தால் பாதிக்கப்பட்ட கடனுக்காக வழங்கப்படும் காசோலை, அந்தக் கடன் குறித்து ஆவணத்தில் வெளிப்படையான குறிப்பு இல்லாவிட்டாலும், இந்திய ஒப்பந்தச் சட்டம் சட்டப்பிரிவு 25(3)-இன் கீழ் நிறைவேற்றத்தக்க உள்ளுறை வாக்குறுதியாகும்; சமர்ப்பிப்பு நடைபெறாததால் இழப்பு ஏற்பட்டதைப் பதிலுரையில் கூறி நிரூபிக்காதவரை, காசோலை எழுதிக் கொடுத்தவர் முதன்மைக் கடனாளியாகவே தொடர்வார்"** என்ற சட்டக் கொள்கையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

---

**IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS**
**A.S.No.16 of 2022 and C.M.P.No.585 of 2022**
**K.V. Murugesan Vs S.S. Maniyan**
**Coram: The Hon'ble Mr. Justice N. Satthish Kumar**
**Reserved on: 28.03.2025 | Pronounced on: 08.04.2025**
**Citation: 2025 (3) CTC 273**

❓ **Bharatiya Sakshya Adhiniyam, 2023-ன் சட்டப்பிரிவு 63(4)-ன் கீழ் மின்னணு ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாக தாக்கல் செய்...
09/08/2026

❓ **Bharatiya Sakshya Adhiniyam, 2023-ன் சட்டப்பிரிவு 63(4)-ன் கீழ் மின்னணு ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாக தாக்கல் செய்ய, Hash Value மற்றும் நிபுணரின் சான்றிதழை கட்டாயமாகக் கோருவது அரசியலமைப்புக்கு முரணானதா?**

மின்னணு ஆவணங்கள் இன்று பெரும்பாலான வழக்குகளில் முக்கிய சான்றுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னஞ்சல்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள், WhatsApp உரையாடல்கள், மின்னணு கோப்புகள் போன்றவை நீதிமன்றங்களில் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்நிலையில், Bharatiya Sakshya Adhiniyam, 2023-ன் சட்டப்பிரிவு 63(4) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை (Schedule), மின்னணு ஆவணங்களை சான்றாக ஏற்கும்போது Part A-ல் அந்த ஆவணத்தின் **Hash Value** குறிப்பிடப்பட வேண்டும் என்றும், Part B-ல் ஒரு **நிபுணரின் சான்றிதழ்** பெறப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை, சாதாரண வழக்காடிகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது; மின்னணு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே கடினமாகிவிடுகிறது; எனவே இந்த சட்டப்பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி **Pune Bar Association** உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு ஆணை மனு தாக்கல் செய்தது.

மனுதாரர் தரப்பில், இந்திய சாட்சியச் சட்டம், 1872-ன் சட்டப்பிரிவு 65B-ல் இருந்த நடைமுறையை விட, புதிய Bharatiya Sakshya Adhiniyam கூடுதல் நிபந்தனைகளை விதித்துள்ளது என்றும், குறிப்பாக Hash Value மற்றும் நிபுணரின் சான்றிதழ் இல்லாமல் மின்னணு ஆவணங்களை ஏற்க முடியாது என்பதால், சாதாரண வழக்காடிகளின் நீதியை அணுகும் உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் வாதிடப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் **R. v. B & Anr. (2024 SCC OnLine Mad 6084)** தீர்ப்பின்படி, Part B-ல் கையொப்பமிட வேண்டிய நிபுணர் Information Technology Act, 2000 சட்டப்பிரிவு 79A-ன் கீழ் அறிவிக்கப்பட்ட **Examiner of Electronic Evidence** ஆகவே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதால், நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிபுணர்களையே அணுக முடியும்; இதனால் சட்டம் நடைமுறையில் செயல்படுத்த முடியாததாக மாறுகிறது என்றும் வாதிடப்பட்டது.

இதனை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்ப வளர்ச்சியால் மின்னணு ஆவணங்கள் அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் Deepfake தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் மின்னணு ஆவணங்களை மாற்றியமைப்பதும், போலியாக உருவாக்குவதும் எளிதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், மின்னணு ஆவணங்களின் **உண்மைத்தன்மை (Authenticity)** மற்றும் **முழுமைத்தன்மை (Integrity)** உறுதி செய்யப்படுவது மிகவும் அவசியம் என்பதால், Bharatiya Sakshya Adhiniyam புதிய பாதுகாப்பு முறைகளை கொண்டு வந்துள்ளது என்று நீதிமன்றம் விளக்கியது.

Hash Value குறித்து நீதிமன்றம் முக்கியமான விளக்கம் அளித்தது. ஒரு மின்னணு ஆவணத்திற்கு Hash Value என்பது அதன் **மின்னணு விரல்ரேகை (Electronic Fingerprint)** போன்றதாகும். ஒரு ஆவணம் பின்னர் மாற்றப்பட்டுள்ளதா அல்லது அசலான நிலையிலேயே உள்ளதா என்பதை துல்லியமாகக் கண்டறிய அது உதவுகிறது. எனவே Part A-ல் Hash Value குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனை, சட்டத்தின் நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையது என்றும், அது தன்னிச்சையானதோ அல்லது காரணமற்றதோ அல்ல என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது. அதேபோல் Part B-ல் நிபுணரின் சான்றிதழை கட்டாயமாக்கியிருப்பதும், மின்னணு சான்றுகளின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அடுக்காகும்; எனவே அது அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் கூறியது.

Part B-யில் யார் நிபுணராக கையொப்பமிடலாம் என்ற கேள்வியையும் நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்தது. Bharatiya Sakshya Adhiniyam சட்டப்பிரிவு 39(1) மற்றும் 39(2)-ஐ ஒன்றாக வாசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. சட்டப்பிரிவு 39(2)-ன் கீழ் Information Technology Act, 2000 சட்டப்பிரிவு 79A-ன் கீழ் அறிவிக்கப்பட்ட **Examiner of Electronic Evidence**-இன் கருத்து நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்க நிபுணர் கருத்தாகும். ஆனால், அதுவே ஒரே வகை நிபுணர் என்று பொருள் கொள்ள முடியாது. கணினி அறிவியல் மற்றும் இணைய தடயவியல் (Cyber Forensics) துறையில் சிறப்புத் திறனும் அனுபவமும் கொண்ட வேறு நபர்களையும், நீதிமன்றம் அவர்களின் தகுதியை திருப்திகரமாக ஏற்றுக்கொண்டால், நிபுணர்களாகக் கருதி அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்; அத்தகைய நபர்களும் Part B-யில் கையொப்பமிடலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் **R. v. B & Anr.** வழக்கில் Part B-யில் கட்டாயம் Section 79A-ன் கீழ் அறிவிக்கப்பட்ட நிபுணரே கையொப்பமிட வேண்டும் என்று கூறிய கருத்து, கட்டாய முன்னுதாரணமாக (Binding Precedent) கருதப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் விளக்கியது. இருப்பினும், இந்த சட்டக் கேள்வியில் இறுதியான தீர்ப்பை வழங்காமல், எதிர்காலத்தில் பொருத்தமான வழக்கில் அந்தக் கேள்வியை முழுமையாக தீர்மானிக்க திறந்த நிலையில் வைத்துவிட்டு, இந்த ஆணை மனுவை முடித்துவைத்தது.

**இந்த தீர்ப்பின் மூலம், Bharatiya Sakshya Adhiniyam, 2023-ன் சட்டப்பிரிவு 63(4)-ன் கீழ் மின்னணு ஆவணங்களுக்கான Hash Value மற்றும் நிபுணரின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு முரணானதல்ல; அவை மின்னணு சான்றுகளின் உண்மைத்தன்மை மற்றும் முழுமைத்தன்மையை உறுதி செய்யும் நியாயமான பாதுகாப்பு நடைமுறைகளாகும். மேலும், Part B-யில் கையொப்பமிடுவது Information Technology Act, 2000 சட்டப்பிரிவு 79A-ன் கீழ் அறிவிக்கப்பட்ட Examiner of Electronic Evidence-களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை; நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் கணினி அறிவியல் மற்றும் இணைய தடயவியல் துறையில் சிறப்புத் திறன் பெற்ற பிற நிபுணர்களின் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற முக்கியமான சட்டக் கொள்கையை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.**

---

**IN THE SUPREME COURT OF INDIA**

**Writ Petition (Civil) No. 599 of 2026**

**Pune Bar Association v. Union of India & Others**

**Coram:** Chief Justice Surya Kant, Justice Joymalya Bagchi & Justice Vipul M. Pancholi

**Date:** 22.05.2026

**Citation:** **2026 (3) CTC 765**

❓ மோட்டார் விபத்தில் காயமடைந்தவர் தனது Mediclaim காப்பீட்டின் மூலம் மருத்துவச் செலவை ஏற்கனவே பெற்றிருந்தால், அதே மருத்து...
08/08/2026

❓ மோட்டார் விபத்தில் காயமடைந்தவர் தனது Mediclaim காப்பீட்டின் மூலம் மருத்துவச் செலவை ஏற்கனவே பெற்றிருந்தால், அதே மருத்துவச் செலவிற்காக மோட்டார் வாகனச் சட்டம் சட்டப்பிரிவு 166-ன் கீழ் கோரப்படும் இழப்பீட்டிலிருந்து அந்தத் தொகையை கழிக்க முடியுமா?

மோட்டார் வாகன விபத்தில் காயமடைந்த ஒருவர், Motor Accidents Claims Tribunal-ல் மோட்டார் வாகனச் சட்டம், 1988 சட்டப்பிரிவு 166-ன் கீழ் மருத்துவச் செலவு, வருமான இழப்பு, எதிர்கால வருமான இழப்பு, போக்குவரத்து செலவு, சிறப்பு உணவுச் செலவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இழப்பீடு கோரினார். அதே நேரத்தில், அவர் முன்கூட்டியே கட்டியிருந்த Mediclaim காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையிலும் அதே மருத்துவச் செலவிற்கான திருப்பிச் செலுத்துதலை பெற்றிருந்தார். இதனால், Tribunal வழங்கும் இழப்பீட்டிலிருந்து Mediclaim மூலம் பெற்ற மருத்துவச் செலவை கழிக்க வேண்டுமா என்பது முக்கியமான சட்டக் கேள்வியாக எழுந்தது.

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, The New India Assurance Co. Ltd. v. Dineshchandra Shantilal Shah, Vrajesh Navnitlal Desai v. K. Bagyam, மற்றும் Royal Sundaram Alliance Insurance Co. Ltd. v. Ajit Chandrakant Rakvi ஆகிய தீர்ப்புகளில் இருந்த முரண்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்து, Mediclaim மூலம் பெறப்பட்ட தொகையை MACT வழங்கும் இழப்பீட்டிலிருந்து கழிக்க முடியாது என்று தீர்மானித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டாளரான காப்பீட்டு நிறுவனம், மருத்துவச் செலவு ஏற்கனவே Mediclaim மூலம் திருப்பிச் செலுத்தப்பட்டதால், அதே தலைப்பில் மீண்டும் இழப்பீடு வழங்குவது "double benefit" அல்லது இரட்டை பலனை ஏற்படுத்தும் என்றும், அது "just compensation" என்ற கோட்பாட்டிற்கு முரணானது என்றும் வாதிட்டது. Reliance General Insurance Co. Ltd. v. Shashi Sharma ((2016) 9 SCC 627) தீர்ப்பில், ஒரே இழப்பிற்காக இருமுறை இழப்பீடு வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும் Helen C. Rebello v. Maharashtra SRTC ((1999) 1 SCC 90) தீர்ப்பில் உயிர்காப்பீடு, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவை விபத்துடன் தொடர்பில்லாத சுயாதீன உரிமைகள் என்பதால் மட்டுமே கழிக்கப்படவில்லை; ஆனால் Mediclaim நேரடியாக விபத்தால் ஏற்பட்ட மருத்துவச் செலவுடன் தொடர்புடையது என்பதால் அதனை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் வாதிட்டது. Oriental Insurance Co. Ltd. v. R. Swaminathan தீர்ப்பிலும், முதலாளியால் ஏற்கனவே செலுத்தப்பட்ட மருத்துவச் செலவை மீண்டும் வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

மறுபுறம், காயமடைந்தவர் தரப்பில், Motor Vehicles Act-ன் கீழ் கிடைக்கும் இழப்பீடு என்பது சட்டத்தால் உருவாக்கப்பட்ட பரிகாரம்; Mediclaim மூலம் கிடைக்கும் தொகை என்பது ஒருவர் தாமாகவே காப்பீட்டு பிரீமியம் செலுத்தி பெற்ற ஒப்பந்த உரிமை என்று வாதிடப்பட்டது. இரண்டிற்கும் மூலாதாரம் முற்றிலும் வேறுபட்டது என்பதால் ஒன்றை மற்றொன்றுடன் கலந்து பார்க்க முடியாது என்று கூறப்பட்டது. Helen C. Rebello ((1999) 1 SCC 90), United India Insurance Co. Ltd. v. Patricia Jean Mahajan ((2002) 6 SCC 281), Sebastiani Lakra v. National Insurance Co. Ltd. ((2019) 17 SCC 465) மற்றும் Bradburn v. Great Western Railway Co. ஆகிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, தவறு செய்த நபருக்கோ அல்லது அவரது காப்பீட்டு நிறுவனத்திற்கோ, பாதிக்கப்பட்டவர் முன்கூட்டியே எடுத்திருந்த காப்பீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என்றும் வாதிட்டனர். மேலும் National Insurance Co. Ltd. v. Pranay Sethi ((2017) 16 SCC 680) தீர்ப்பின் அடிப்படையில் "நியாயமான இழப்பீடு" என்பது பாதிக்கப்பட்டவரின் இழப்பை ஈடுசெய்வதே நோக்கம்; அவர் தன்னுடைய சொந்த பணத்தில் வாங்கிய Mediclaim பலனை பறிப்பது அந்த நோக்கத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டது.

உச்சநீதிமன்றம் முதலில் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இந்தக் கேள்வியில் முற்றிலும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதை பதிவு செய்தது. சில உயர்நீதிமன்றங்கள் Mediclaim தொகை கழிக்கப்படாது என்றும், சில உயர்நீதிமன்றங்கள் கழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததால், இந்தச் சட்டநிலையை ஒருமுறை தெளிவுபடுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டது.

அதன்பின் "double benefit" என்ற கோட்பாட்டை நீதிமன்றம் விரிவாக விளக்கியது. ஒரே இழப்பிற்காக இரண்டு முறை இழப்பீடு பெற அனுமதிக்க முடியாது என்பது சட்டத்தின் அடிப்படை என்றாலும், இரண்டு தொகைகளும் ஒரே சட்ட மூலத்திலிருந்து வருகிறதா அல்லது ஒன்றுக்கொன்று மாற்றாக வழங்கப்படுகிறதா என்பதே முக்கியமான சோதனை என்று கூறியது. ஒரு தொகை, அதே இழப்பிற்கு மாற்றாக வழங்கப்படும் இழப்பீடாக இருந்தால் அது கழிக்கப்படலாம். ஆனால், அது சுயாதீனமான உரிமை அல்லது தனித்துவமான சட்ட அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பலனாக இருந்தால் கழிக்க முடியாது என்று விளக்கியது.

இந்தக் கோட்பாட்டை பயன்படுத்தி Mediclaim மற்றும் MACT இழப்பீட்டை ஒப்பிட்ட நீதிமன்றம், Motor Vehicles Act-ன் கீழ் கிடைக்கும் இழப்பீடு என்பது தவறிழைத்தவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு சட்டம் வழங்கும் பரிகாரம்; ஆனால் Mediclaim என்பது ஒருவர் தமது பணத்தில் காப்பீட்டு பிரீமியம் செலுத்தி பெற்ற தனிப்பட்ட ஒப்பந்த உரிமை என்று தெளிவுபடுத்தியது. காப்பீடு எடுப்பதா வேண்டாமா என்பது தனிநபரின் விருப்பம்; காப்பீடு எடுத்ததற்காக அவர் பின்னர் பெற வேண்டிய சட்டப்பூர்வ இழப்பீட்டை இழக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது.

Helen C. Rebello தீர்ப்பில் கூறப்பட்ட கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்திய நீதிமன்றம், வருங்கால வைப்பு நிதி, Gratuity, Pension, Life Insurance ஆகியவை எவ்வாறு விபத்திலிருந்து சுயாதீனமான உரிமைகளோ, அதேபோல Mediclaim-மும் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சுயாதீனமான உரிமைதான் என்று கூறியது. அந்த உரிமையை கழிப்பது, காப்பீட்டு பிரீமியம் தொடர்ந்து செலுத்தியவரின் நன்மையைப் பறித்து, தவறு செய்த வாகனத்தின் காப்பீட்டு நிறுவனத்திற்கு தேவையற்ற பலனை வழங்குவதாகும் என்றும் குறிப்பிட்டது.

மேலும், Motor Vehicles Act என்பது சமூகநல நோக்கத்துடன் இயற்றப்பட்ட பயனளிக்கும் சட்டம் என்பதால், அதன் நோக்கத்தை குறைக்கும் வகையில் Mediclaim தொகையை கழிக்க முடியாது என்றும் கூறியது. ஒருவர் தமது சொந்த செலவில் பெற்ற ஒப்பந்த பலனையும், சட்டத்தால் வழங்கப்படும் இழப்பீட்டையும் ஒன்றாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

இறுதியாக, Mediclaim மூலம் பெறப்பட்ட மருத்துவச் செலவு, MACT வழங்கும் மருத்துவச் செலவிலிருந்து கழிக்கப்படாது என்றும், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் Full Bench வழங்கிய தீர்ப்பில் எந்த சட்டப்பிழையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்மானித்து, காப்பீட்டு நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பின் மூலம், "Motor Vehicles Act-ன் கீழ் வழங்கப்படும் இழப்பீடு என்பது சட்டப்பூர்வமான பரிகாரம்; Mediclaim மூலம் கிடைக்கும் தொகை என்பது காப்பீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பெறப்படும் சுயாதீனமான உரிமை. எனவே Mediclaim மூலம் மருத்துவச் செலவு ஏற்கனவே பெறப்பட்டிருந்தாலும், அந்தத் தொகையை மோட்டார் விபத்து இழப்பீட்டிலிருந்து கழிக்க முடியாது; பாதிக்கப்பட்டவர் தனது சொந்த காப்பீட்டு ஒப்பந்தத்தின் பலனை இழக்கச் செய்ய முடியாது" என்ற முக்கியமான சட்டக் கொள்கையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

SUPREME COURT OF INDIA

Civil Appeal No. … of 2026 (@ SLP (Civil) No.18267 of 2025)

New India Assurance Company Limited v. Dolly Satish Gandhi and Another

Coram: Justice Sanjay Karol & Justice Vipul M. Pancholi

Date: 15.05.2026

Citation: 2026 INSC 498

❓ **1956-க்கு முன் பாகப்பிரிவில் கிடைத்த சொத்து என்பதால் மட்டும் அது தனிச்சொத்தாக மாறிவிடுமா, அல்லது குடும்பத்தினர் அதனை...
07/08/2026

❓ **1956-க்கு முன் பாகப்பிரிவில் கிடைத்த சொத்து என்பதால் மட்டும் அது தனிச்சொத்தாக மாறிவிடுமா, அல்லது குடும்பத்தினர் அதனை கூட்டுக் குடும்பச் சொத்தாக நடத்தினால் அதன் இயல்பு தொடருமா — அத்தகைய சொத்தில் எழுதப்பட்ட உயில் செல்லுமா?**

இந்த வழக்கில், வாதியான கவுசல்யாதேவி, தனது தாத்தா ஆறுமுக கவுண்டரின் சொத்துகளில் பாகப்பிரிவினை கோரி வழக்கு தொடர்ந்தார். வாதி, இரண்டாம் பிரதிவாதியான நடராஜனின் முதல் மனைவிக்கு பிறந்த மகள். வழக்கில் இடம்பெற்ற முதல் சொத்து, 23.02.1952 அன்று நடைபெற்ற குடும்பப் பாகப்பிரிவினையில் ஆறுமுக கவுண்டருக்கு ஒதுக்கப்பட்ட 'C' அட்டவணை சொத்தாகும். இரண்டாம் சொத்து, முதல் சொத்தின் வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டதாக வாதி கூறினார். தமிழ்நாடு இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 1990 அமலுக்கு வந்தபோது திருமணம் ஆகாத மகளாக இருந்ததால், இரு சொத்துகளிலும் தனக்கு பங்குரிமை உண்டு என்று வாதிட்டார். மேலும், ஆறுமுக கவுண்டர் தனது பேரன் விவேக்கிற்கு ஆதரவாக 20.02.1996 அன்று எழுதியதாகக் கூறப்பட்ட உயில் போலியாக உருவாக்கப்பட்டதாகவும், அது தன்னை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பில், முதல் சொத்து 1952-ஆம் ஆண்டு, அதாவது இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 அமலுக்கு வருவதற்கு முன்பே ஆறுமுக கவுண்டருக்கு பாகப்பிரிவில் ஒதுக்கப்பட்டதால், அது அவரது தனிச்சொத்தாக மாறிவிட்டது என்றும், எனவே அவர் அதனை உயில் மூலம் தனது பேரனுக்கு வழங்க முழு அதிகாரம் பெற்றிருந்தார் என்றும் வாதிட்டனர். இரண்டாம் சொத்து, நடராஜன் தனது பின்னல் தொழில் மூலம் சம்பாதித்த வருமானத்தில் வாங்கிய தனிச்சொத்து என்பதால், அதிலும் வாதிக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

விசாரணை நீதிமன்றம், உயில் சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை என்றும், முதல் சொத்து மட்டும் கூட்டுக் குடும்ப மூதாதையர் சொத்து என்றும், இரண்டாம் சொத்து நடராஜனின் தனிச்சொத்து என்றும் தீர்மானித்து, முதல் சொத்தில் மட்டும் வாதிக்கு ஆரம்ப பாகப்பிரிவினைத் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து நான்காம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டில், பிரதிவாதிகள், பதிவு செய்யப்பட்ட உயில் என்பதால் அதற்கு உண்மைத்தன்மை குறித்த முன்அனுமானம் உண்டு என்றும், **Paneerselvan @ Nellappan (Died) v. Amsavalli** தீர்ப்பின்படி உயில் நிரூபிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், வாதி பல ஆண்டுகளாக சொத்தில் அனுபவ உரிமையில் இல்லாததால், தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணச் சட்டம் சட்டப்பிரிவு 37(2)-ன் கீழ் வழக்கை மதிப்பீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர். இதற்கு பதிலாக, வாதி தரப்பில், 1952-க்கு முன் அல்லது பின் என்பதைக் காட்டிலும், அந்தச் சொத்து பின்னர் குடும்பத்தினரால் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதே அதன் தன்மையை நிர்ணயிக்கும் என்றும், **N. Marithoppai v. Alamelu**, அதில் பின்பற்றப்பட்ட **Neelavathi v. N. Natarajan (1980 (2) SCC 247)** தீர்ப்புகளின்படி, கூட்டுச் சொத்தில் ஒரு பங்குதாரர் வெளிப்படையாக விலக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்படாத வரை, அவர் கூட்டான அனுபவ உரிமையில் இருப்பதாக சட்டம் முன்அனுமானம் செய்கிறது என்றும் வாதிடப்பட்டது.

நீதிமன்றம், வழக்கின் மையக் கேள்வியாக முதல் சொத்தின் தன்மையை ஆராய்ந்தது. Ex.A1 பாகப்பிரிவினை ஆவணத்தின் மூலம், 23.02.1952 அன்று அந்தச் சொத்து ஆறுமுக கவுண்டருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும், அதனால் மட்டும் அது அவரது தனிச்சொத்தாக மாறிவிட்டது என்று கூற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குறிப்பாக, Ex.A3 மற்றும் Ex.A4 அடமான ஆவணங்களில், 1966 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஆறுமுக கவுண்டரும் அவரது மகன்களும் இணைந்து அந்தச் சொத்தை அடமானம் வைத்திருப்பதை நீதிமன்றம் முக்கியமாக எடுத்துக்காட்டியது. இந்த ஆவணங்கள், ஆறுமுக கவுண்டரே அந்தச் சொத்தை தனது தனிச்சொத்தாக நடத்தாமல், கூட்டுக் குடும்பச் சொத்தாகவே நடத்தி வந்ததை வெளிப்படுத்துகின்றன என்று நீதிமன்றம் கண்டறிந்தது. எனவே, பாகப்பிரிவு இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 அமலுக்கு வருவதற்கு முன் நடைபெற்றிருந்தாலும், குடும்பத்தினரின் நடத்தையால் அந்தச் சொத்தின் கூட்டுக் குடும்பத் தன்மை தொடர்ந்தது என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 1990 அமலுக்கு வந்த நாளில் திருமணம் ஆகாத மகளாக இருந்த வாதி, பிறப்புரிமை மூலம் அந்தச் சொத்தில் பங்குரிமை பெற்றவர் என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

உயில் தொடர்பாக, அசல் உயில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; பதிவு நகல் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உயிலின் சான்றொப்பச் சாட்சியாக விசாரிக்கப்பட்ட D.W.3, உயிலை எழுதியவர் தனது முன்னிலையில் கையெழுத்திட்டார், தானும் அவருடைய முன்னிலையில் கையெழுத்திட்டார் என்பதைக் கட்டாயமாக நிரூபிக்கவில்லை. இந்திய சாட்சியச் சட்டம் சட்டப்பிரிவு 68 மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் சட்டப்பிரிவு 63 ஆகியவற்றின் கட்டாய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டும் உயிலை செல்லுபடியாக்காது என்று நீதிமன்றம் தீர்மானித்தது. **Paneerselvan @ Nellappan v. Amsavalli** தீர்ப்பில், பதிவு செய்யப்பட்ட உயிலுடன் சேர்த்து சட்டப்படி சான்றொப்பமும் நிரூபிக்கப்பட்டிருந்ததால் மட்டுமே அந்த உயில் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இவ்வழக்கில் அத்தகைய நிரூபணம் இல்லாததால், அந்தத் தீர்ப்பு பொருந்தாது என்றும் நீதிமன்றம் விளக்கியது.

நீதிமன்றக் கட்டணம் தொடர்பாக, **N. Marithoppai v. Alamelu**, **Neelavathi v. N. Natarajan** தீர்ப்புகளைப் பின்பற்றி, கூட்டுச் சொத்தில் பங்குதாரர் ஒருவரை வெளிப்படையாக விலக்கி வைத்திருப்பது நிரூபிக்கப்படாத வரை, அவர் சட்டப்படி கூட்டான அனுபவ உரிமையில் இருப்பதாக கருதப்படுவார்; எனவே, தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணச் சட்டம் சட்டப்பிரிவு 37(2)-ன் கீழ் வழக்கை மதிப்பீடு செய்து தாக்கல் செய்தது சரியானதே என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இரண்டாம் சொத்து தொடர்பான தீர்ப்பை வாதி மேல்முறையீடு செய்யாததால், மேல்முறையீடு முதல் சொத்தை மட்டுமே சார்ந்ததாக இருப்பதாகவும் குறிப்பிட்டது.

இறுதியாக, முதல் சொத்து கூட்டுக் குடும்ப மூதாதையர் சொத்து என்றும், வாதிக்கு பிறப்புரிமை உண்டு என்றும், உயில் சட்டப்படி நிரூபிக்கப்படாததால் அது வாதியை கட்டுப்படுத்தாது என்றும் தீர்மானித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆரம்ப பாகப்பிரிவினைத் தீர்ப்பில் தலையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

**இந்த தீர்ப்பின் மூலம், 1956-க்கு முன் பாகப்பிரிவில் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சொத்து என்பதால் மட்டும் அது அவரது தனிச்சொத்தாக மாறிவிடாது; பின்னர் குடும்பத்தினர் அதனை கூட்டுக் குடும்பச் சொத்தாக நடத்தினால் அதன் தன்மை தொடரும். அத்தகைய சொத்தில் எழுதப்பட்ட உயில், இந்திய சாட்சியச் சட்டம் சட்டப்பிரிவு 68 மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் சட்டப்பிரிவு 63-ன் படி முறையாக நிரூபிக்கப்படாவிட்டால், அது உரிமையை மாற்றாது; மேலும், 1990 தமிழ்நாடு இந்து வாரிசுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியுள்ள மகளுக்கு பிறப்புரிமை மூலம் பங்குரிமை உண்டு.**

**Court:** High Court of Judicature at Madras
**Case No.:** A.S. No.917 of 2024 & C.M.P. No.24109 of 2024
**Parties:** A. Krishnasamy Gounder & Another v. M. Kowsalyadevi & Others
**Coram:** Hon'ble Mr. Justice P.B. Balaji
**Date:** 30.03.2026
**Citation:** 2026:MHC:1325

Address

Coimbatore
641659

Alerts

Be the first to know and let us send you an email when Budding Lawyers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category